ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு

article

கம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம். மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காய். பினாங்கின் பிரபல உணவுப் பொருள். ஜாதிக்காயை பல உருவங்களில் ஒரு நொறுங்கு தீனியாக ஆக்கி விற்கிறார்கள். உலர வைத்துச் சீனியிட்டு, உப்பில் ஊறவைத்து இப்படிப் பல வகையில் வண்ண வண்ணப் பொட்டலங்களில்.  பினாங்குக்குச் சுற்றுலா வரும் எவரும் பைப்பையாக இவற்றை வாங்கிப் போவார்கள்.

 

ஆனால் இந்த ஜாதிக்காய் கிராமத்தில் இப்போது இந்த ஜாதிக்காய் விளைவதில்லை. பேர் மட்டுமே மிச்சம். பினாங்கு மக்களுக்கே முன்பு அதிகம் தெரிந்திராத இந்த கிராமம் அண்மையில் மலேசியாவில் மட்டுமல்லாது உலகச் செய்திகளிலும் அதிகம் பேசப்பட்டது. இதற்குக் காரணம் இந்தக் கிராமம் மலேசியாவில் இந்தியர்களின் வாழ்க்கை நிலைமைக்கு ஒரு குறியீடாக ஆகிவிட்டதுதான்.

 

கம்போங் புவா பாலா நெருக்கடி மிக்க ஜோர்ஜ்டவுனின் தென்கிழக்கில் மிக விலையுள்ள நிலத்தில், நவீன குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்திருந்தது. கிராமத்தில் குடியிருக்கும் அனேகமாக அனைவரும் இந்தியர்கள். சாதாரண வேலைகளிலும், மாடு கன்றுகள் வைத்தும்  பிழைப்பு நடத்தி வந்தார்கள். குடிசை வீடுகள்; மாட்டுத் தொழுவங்கள்; பால் விநியோகிப்பாளர்கள்; ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் இப்படி. செல்வ வளமிக்க ஒரு பெருநகரில் கால, இட வழுப் போல இப்படி ஓர் எளிய கிராமம் இத்தனை நாள் பிழைத்திருந்ததே ஒரு ஆச்சரியம்தான்.

 

கம்போங் புவா பாலா அமைந்திருக்கும் இடம் 200 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் டேவிட் ப்ரவ்ன் என்னும் வெள்ளைக்கார நிலச்சுவான்தாரருக்குச் சொந்தமாக இருந்தது. புக்கிட் குளுகோர் என்னும் பகுதியில் ஏராளமான நிலத்துக்கு அவர் சொந்தக்காரராக இருந்தார். அந்த நிலங்களில் தேங்காய், ஜாதிக்காய் முதலியன பயிரிட்டிருந்தார். இந்தத் தோட்டங்களில் ஏராளமான இந்தியர்கள் (தமிழர்கள்) அவரின் கீழ் வேலை செய்துவந்தார்கள். இந்தப் பகுதி முழுவதும் ப்ரவ்ன் எஸ்டேட் என்றே வழங்கப்பட்டு வந்தது. இன்றும் அவர் பெயரில் இங்கு ஓர் வீடமைப்பு பகுதியும் சாலைகளும் இருக்கின்றன.

 

இந்த நிலங்களின் உரிமை பின்னர் ப்ரவ்னின் சந்ததிகளிடம் வந்தது. அவர்களும் மெது மெதுவாகத் தங்கள் தாயகமான பிரிட்டனுக்குப் போய்விட்டார்கள். அவர்களுடைய சொத்துக்களை எச்.ஆர். வாட்ஸ் என்னும் வெள்ளைக்கார நிர்வாகி ஏஜண்டாக நிர்வகித்து வந்தார். கால மாற்றத்தில் இந்த விவசாய நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு துண்டாடப்பட்டு பிறருக்கு விற்கப்பட்டன. அந்த வேளையில் அங்கு குடியிருந்த இந்தியத் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

 

ப்ரவ்ன் சந்ததியினர் நாம் அறிந்துள்ள கொடுமைக்கார வெள்ளைக்காரத் துரைகள் அல்லர். தங்கள் தொழிலாளர்களிடம் பாசமும் அன்பும் கொண்டவர்கள்.  வாட்சும் அப்படித்தான். வேலையும் குடியிருப்பும் இழந்த இந்தியர்கள் (அநேகமாக அனைவரும் தமிழர்கள்) அனைவருக்கும் ப்ரவ்ன் குடும்பத்தாரின் வாரிசுகள் குடியிருக்க நிலங்களை ஒதுக்கித் தந்தார்கள். இப்படி நிலம் பெற்ற பலருக்குத் தனிப்பட்ட நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டு இப்போது அவர்கள் வசதியான வீட்டுடைமையாளர்களாக இருக்கிறார்கள்.

 

இதில் மாடு கன்று வைத்திருந்த ஒரு குழுவினருக்கு வசதியான பெரிய நிலப்பகுதியை ஒதுக்கி அதில் ஒரு 40 குடும்பங்களையும் ப்ரவ்ன் சந்ததியினர் வாழ வைத்தனர்.  அதுவே இப்போது கம்போங் புவா பாலா என்று வழங்குகிறது. இந்த நிலத்தைத் தனிப்பட்டோருக்குப் பட்டா எழுதிக் கொடுக்காமல் கூட்டாக நிர்வகிக்க ஓர் அறக்கட்டளை – டிரஸ்ட் – ஏற்படுத்தி அதனை பிரிட்டிஷ் காலனித்துவ அரசே நிர்வகித்தும் வந்தது.

 

மலாயா சுதந்திரம் பெற்றதும் இந்த அறக்கட்டளை சுதந்திர மலாயா கூட்டரசு அரசாங்கத்திடம் மாற்றித் தரப்பட்டது.

 

காலப்போக்கில் எவ்வாறோ கூட்டரசு அரசாங்கத்திடமிருந்த இந்த நில நிர்வாகம் பினாங்கு மாநில அரசுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால் இந்த மாற்றம் ஒரு ஊழல் என்பது மட்டும் தெளிவு.

 

இதில் மேலும் ஒரு கட்டத்தில் பினாங்கு மாநில அரசு இந்த நிலத்தைத் தன் நிலமாக எடுத்துக்  கொண்டு அதனைப் பினாங்கு மாநில அரசு ஊழியர்கள் கூட்டுறவுக் கழகத்திற்கு (பேரளவில் மலாய்க்காரர்களையே உறுப்பினராகக் கொண்டது)  விற்றுவிட்டது.   ஏற்கனவே இந்தக் கூட்டுறவுக் கழகம் பினாங்கு உயர்நீதி மன்றத்துக்கு அருகில் வைத்திருந்த வேறு ஒரு நிலம், உயர்நீதி மன்றக் கட்டிட விரிவாக்கத்திற்குப் பினாங்கு அரசுக்குத் தேவைப்பட்டதால்,  அதற்கு மாற்று நிலமாக புவா பாலா நிலத்தைக் அதற்குக் கொடுத்ததாகவும் தகவல். அந்த நிலமும் நடப்பு சந்தை விலையை விடக் குறைந்த விலைக்கு அரசாங்கத்திடமிருந்து கூட்டுறவுக் கழகத்துக்குக் கைமாற்றப்பட்டுள்ளது. ஆகவே இந்தக் கைமாற்றலில் கையூட்டுக்களும் ஊறிய நாற்றம் அதிகம் உள்ளது.

 

கூட்டுறவுக் கழகம் புவா பாலா நிலத்தை வீட்டுமனைத் திட்டமாக மாற்றி சொகுசு அடுக்குமாடி வீடுகள் கட்டத் திட்டம் வரைந்தது. இது விலையுயர்ந்த பகுதி. ஜனநெருக்கம் மிக்க பகுதியும்கூட. ஆகவே இந்தத் திட்டம் அதன் உரிமையாளர்களுக்குப் பெரும் இலாபத்தைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.

 

ஏற்கனவே குடியிருந்த மக்களை வெளியேறுமாறு அறிக்கை கொடுத்த போதுதான் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை அறிந்து கொதித்தெழுந்து எதிர்த்தனர்.

 

இவையெல்லாம் நடந்தது நாட்டை ஆளும் கட்சியான தேசிய முன்னணியின் மாநில ஆட்சியின் போது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி, முந்தைய அரசின் பல ஊழல்களில் புவா பாலா நில ஊழலும் ஒன்று எனப் பிரச்சாரம் செய்து, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலத்தை மீட்டு மக்களிடம் ஒப்படைப்போம் என சத்தியம் செய்தனர். அவர்கள் பினாங்கு ஆட்சியைப் பிடித்த கதை அனைவரும் ஏற்கனவே அறிந்ததே.

 

அவர்கள் ஆட்சிக்கு வருமுன்னர் நிலத்திற்கான பெரும்பாலான தொகை பழைய அரசால் கூட்டுறவுக் கழகத்திடமிருந்து பெறப்பட்டுவிட்டது. மீதமிருந்த சிறிய தொகையை புதிய அரசு பதவியேற்ற பின்னர் நிலத் துறை பெற்றுக் கொண்டு நிலத்தை முழுதாக மாற்றிக் கொடுத்து விட்டது. நிலத் துறை முற்றிலும் மாநில அரசுக்கு உட்பட்டது. இதனைத் தடுக்க முடியாமல் போனது புதிய அரசின் பெரும் பலவீனம்தான். புதிய முதலமைச்சர் இப்படிப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது தனக்குத் தெரியாமல் நடந்தது என்கிறார். அரசாங்க அதிகாரிகளின் உள்வேலையாக இருக்கலாம். ஆனால் யாரும் இதற்காக இதுவரை தண்டிக்கப்படவில்லை.

நிலத்தில் குடியிருந்தவர்கள் பல வழக்குகளைப் போட்டார்கள். ஏராளமான வழக்கறிஞர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். உச்சநீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம், கூட்டரசு நீதிமன்றம் அனைத்திலும் விடாமல் வழக்காடினார்கள்.  ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்பு அவர்களுக்கு எதிராகவே இருந்தது. நீதிமன்றங்கள், நிலப் பெயர் மாற்றமும், விற்பனையும் முறையாகவே நடைபெற்றுள்ளன என்னும் அடிப்படையில் புதிய நில உடைமையாளருக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தன.

 

புதிய மாநில அரசாங்கம் குடியிருப்பாளர்களுக்கு முழு அனுதாபம் காட்டினாலும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றது. அது தலையிட்டு புதிய நில உடைமையாளர், குடியிருப்பாளர்களுக்கு அதே நிலத்தின் ஒரு பகுதியில் சிறு சிறு வீடுகளைக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்க வைத்தது. ஆனால் குடியிருப்பாளர்களுக்கு இது முறையாகப் படவில்லை. தங்கள் உரிமை பறிக்கப்பட்டதாகவே அவர்கள் உணர்ந்தார்கள்.

 

குடியிருப்பாளர்கள் நிலத்துக்கான தங்கள் உரிமையை நிலைநாட்ட கடைசி வரை போராடினார்கள். முதலில் புதிய மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து பழைய அரசாங்கத்தையும் பழைய முதலமைச்சரான கோ சூ கோனையும் பழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஹிண்டிராஃப் இயக்கமும் பங்கு பெற்றது.

 

மக்கள் முன்னணி அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்புக்கு இணைந்து போனது தெரிந்தவுடன் அதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். புதிய முதலமைச்சர் லிம் குவான் எங் கோழை என முழக்கமிட்டார்கள். அவர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

 

இதன் பின் பழைய தேசிய முன்னணிதான் தங்களைக் காக்க முடியும் என பிரதமர் நஜீபைச் சரணடைந்தார்கள். இந்த விவகாரத்தில் புதிய முதலமைச்சர் மாட்டிக் கொண்டு விட்டதைப் புரிந்து கொண்ட பிரதமர், நிலம் என்பது மாநில அரசின் அதிகாரத்தில் உள்ளதால், முதலமைச்சரிடமே பேசிக் கொள்ளச் சொல்லிக் கைகழுவி விட்டார். (நீதிமன்றத் தீர்ப்பை மதித்துப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என அவர் கூறியிருக்கலாம். ஆனால் எதிரியை மாட்டிவிட ஒரு வழியிருந்தால் எந்த அரசியல்வாதிதான் அதைத் தவற விடுவார்?)

 

குடியிருப்பாளர்கள் இறுதி வரை வீரமாகப் போராடினார்கள். வீட்டை உடைக்க வந்த ராட்சத யந்திரங்களின் முன் படுத்தார்கள். ஒரு பெண் தீக்குளிக்கவும் தயாரானார். மலேசிய இந்திய மக்களும் அவர்களுடன் சேர்ந்து போராடினார்கள். இதனால் வீடுகள் உடைபடுவது பலமுறை தள்ளிப் போடப்பட்டது.

 

இதற்கிடையே புதிய நில உடைமையாளர் அளிக்க முன் வந்த சில இழப்பீடுகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு சில குடும்பங்கள் வெளியேறின. புதிய நில உடைமையாளர்கள் ஒரு நாள் வந்து, வெளியேறியவர்கள் வீடுகளை மட்டும் அடையாளமாக இடித்துத் தள்ளினார்கள். சுத்தியல் ஜாதிக்காய் கிராமத்தில் நுழைந்துவிட்டது. இறுதியில் சென்ற வாரம் (2009 செப்டம்பர் இரண்டாம் வாரத்தில்) சிறிது சிறிதாக அனைவரும் வெளியேறிய பின்னர் அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டன. விரைவில் அங்கு சொகுசு அடுக்குமாடி வீடுகள் அமையும். கம்போங் புவா பாலா என்னும் இந்திய மரபு வழிக் கிராமம் அழியும். புதிய மேம்பாட்டுத் திட்டத்தில் அதன் பெயராவது நிலை நிறுத்தப் படுமா எனத் தெரியவில்லை.

 

இந்தப் போராட்டத்தில் இன்னும் ஒரே ஓர் அத்தியாயம்தான் பாக்கியிருக்கிறது. ப்ரவ்ன் இந்த மக்களுக்குக் கொடையாகக் கொடுத்த நிலம், ஓர் அறக்கட்டளையின் நிர்வாகத்திலிருந்து பினாங்கு மாநில அரசின் நிலமாக மாறியதிலும், அதைப் பினாங்கு மாநிலம் தனியாருக்கு விற்றதிலும் ஊழல்கள் நடந்துள்ளதை விசாரித்து அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டால்தான் இது தெரிய வரும். இல்லையெனில் சிவப்பு நாடா போட்டுக் கட்டிய கோப்புகளில் இருளில் கிடந்து அழியவேண்டியதுதான்.

 

இந்தப் போரட்டத்தின் இறுதியில் மிஞ்சி நிற்கும் சில துவர்ப்பு உணர்வுகள்:

 

 1. புதிய மக்கள் கூட்டணி அரசு, வலுவிழந்த, வாயிழந்த மக்களுக்குத் துணை நிற்கும் என்ற படிமம் அகன்றது. அதுவும் அதிகார வர்க்கத்தின் அணைப்புக்களில் சுகம் காணத் தொடங்கிவிடும் என்பது.
 2. மலேசிய இந்தியர்கள் சட்டம் நீதிக்கு முன் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாத முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள் என்ற படிமம் உருவானது.

 

ஒரு பிரிட்டிஷ் பெருமகன் தன் கீழ் வேலை பார்த்த இந்திய மக்களுக்காகக் காட்டிய தயாள சிந்தை, இப்படி ஒரு ஜனநாயக அரசால் நீதிமன்றங்களின் துணையுடன் ராட்சத இயந்திரங்களின் கீழ் நசுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் கீழும், நீதிமன்றங்களின் மேற்பார்வையில், மக்கள் உரிமை நசுக்கப்பட முடியும் என்பதற்கு எதிர்காலத்தில் உலகுக்கே ஒரு எடுத்துக்காட்டாய் இந்தச் சம்பவம் அமையும்.

 

(முடிந்தது)

 

 

6 Comments

Page 1 of 1
 1. karthi
  karthiMarch 17, 2013 at 1:40 pm

  Anand, I think the answer is in the article itself. A handful of people, who agreed with the new Penang government, were given fairly nice houses. Those who did not, got nothing. In any case the original land has been hijacked by the former governmnet and given to private developers. Now it is private property where luxury apartment blocks stand.

  Thanks for the comment.

  Re.Ka.

 2. anand
  anandMarch 17, 2013 at 1:33 pm

  what is the present condition there, is Tamil people get their land.

 3. anand
  anandMarch 17, 2013 at 1:16 pm

  Tamil people are victims. why these kind of loses happened for Tamil people this question raised after reading this news. if this news not published no one knows how Tamil people are cheated by Malaysia government. in Sri Lanka this kind of cheating is more. elections kill Tamil people all over the world. before election they promise Tamil people after election they don’t keep their promise. Tamil people are now hopeless. oh my god this situation is very very bad, very dangerous. how much pain Tamil people experienced due to this kind of cheating.
  i pray god please give property, peace,wealth, and joy to Tamil peoples. god please don’t punish Tamil people. if Tamil people be unique then we win. we are lack in this unique when problem raised. what is the state before British encroachment. no body living there. that place was developed by Tamil people.

 4. V. Dhivakar
  V. DhivakarOctober 28, 2009 at 12:33 pm

  I think this is the one. My friends are also Pillaimaars.

  When Emden was approaching Penang, I did mention a casual small incident by way of little description that Chidambaram’s Father came to Penang with Statues made from Tanjore. This note I derived it from my friends’ family.

  Anyhow thanks for you.

  Anbudan
  Dhivakar

 5. karthi
  karthiOctober 27, 2009 at 9:30 pm

  Dhivaker,

  I am not sure of the Brown Garden temple. “Brown Garden” is a modern housing estate built on a part of what was then called Brown Estate. I do not believe there is a temple in Brown Garden. But there is one nice Veera Kaliamman Temple in Gelugor (former Brown Estate). You could be referring to this temple. A well-maintained temple whose chairman is a good friend of mine. The land where this temple stands was at one time, after the disintegration of Brown Estate, belonged to one Mr. Arumugam Pillai, who sold the land for the temple at a hefty discount. The temple is 100 years old, I believe.

  Thanks for the comment.

 6. V. Dhivakar
  V. DhivakarOctober 27, 2009 at 2:40 pm

  Dear Re. Kaa!

  Very nice one. What you have mentioned is called as Brown Gardens, am I right? One of my friend’s forefather has donated some idols for the temple there. I was told by his family (at Mayuram, when I was doing some research for SMS Emden Novel.) Is the temple still there? May be – some 100 years before it has happened.

  Dhivakar

Leave a Reply